விஞ்ஞான சிந்தனைகளை, முறைகளை நாம் ஒரு வியப்புடனே அணுகிப் பழகிவிட்டோம். விஞ்ஞானிகளை மாயாஜால மனிதர்களாகவே நம் சமூகம் பாவித்து வந்துள்ளது. விஞ்ஞானி என்றால் எதையாவது கண்டு பிடித்தவர் என்பது நம் பெரும்பாலோரின் கருத்து. பொதுவாக, சி.வி. ராமன் என்ன செய்து நோபல் பரிசுக்குத் தகுதியானார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், அவர் நோபல் பரிசு வென்றவர் என்பது மட்டும் தெரியும். இத்துடன், விஞ்ஞானி என்றால் நோபல் பரிசு வென்றிருக்க வேண்டும் என்றும் நினைக்கிறோம்.

விஞ்ஞானச் சிந்தனை என்பது கடந்த 300 ஆண்டுகளாக படிப்படியாக வளர்ந்த ஒரு மனித சிந்தனையின் முதிர்ச்சி என்று சொல்லலாம். 21 –ஆம் நூற்றாண்டில், இந்த சிந்தனை முறைகள், 17 –ஆம் நூற்றாண்டைக் காட்டிலும் பெரிதாக வளர்ந்திருந்தாலும், பொதுப் புரிதல் என்னவோ இன்னும் 18-ஆம் நூற்றாண்டைத் தாண்டவில்லை. பள்ளிப் புத்தகங்களும் ஏதோ வரலாற்றுப் புத்தகம் போல, விஞ்ஞான முன்னேற்றத்தை பட்டியலிடுவதிலேயே கவனம் செலுத்துகின்றன.

விஞ்ஞானச் சிந்தனை முறைகள், சரியாக பள்ளிகளில் சொல்லிக் கொடுக்காவிட்டால், விஞ்ஞானப் பாடத் திட்டம் பெரிய பயனளிக்காது. வெறும் விஞ்ஞான வரலாறு, மற்றும் சமன்பாடுகளை மனப்பாடம் செய்வதோடு நின்று விடும் அபாயம், நம்முடைய இன்றைய கல்வி முறைகளில் நிச்சயம் உண்டு.

விஞ்ஞானச் சிந்தனை என்பது எப்படி ஆரம்பித்தது, எப்படி வளர்ச்சி அடைந்தது, மற்றும் கணினிகள் மூலம் எப்படி வெகு வேகமாக வளர்ந்து வந்துள்ளது என்பதை தமிழ் அறிந்த, விஞ்ஞானம் படிக்கும் மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்த முன்னூலில் இடம் பெற்றுள்ளன.

கணினியும் விஞ்ஞானமும் சம்மந்தம் இல்லாதவை என்பது பரவலாக நம் சமூகத்தில் உள்ள கருத்து. கணினிகள் வணிகத்துடனும், தொழில்நுட்பத்துடனும் சம்மந்தப் படுத்துவது நம் வழக்கம். இது முற்றுலும் உண்மையென்றாலும், ஆரம்ப நாட்களிலிருந்து இன்றுவரை விஞ்ஞான முயற்சிகளுக்கு கணினிகள் உதவி வந்துள்ளன.

கணினி ஒரு கருவி – ஒரு காமிரா போன்ற, ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த கருவி. காமிரா வல்லுனர்கள் இருந்தாலும், பொதுவாக நமக்கெல்லாம் டிஜிட்டல் புகைப்படம் எடுக்கவரும். அதேபோல, யாராக இருந்தாலும் கணினியை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஒருவர் பூச்சியைப் படமெடுக்கலாம். இன்னொருவர் நடனக் கோணங்களைப் படமெடுக்கலாம். ஆனால் இருவருக்கும் புகைப்படம் எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். விஞ்ஞானிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. விஞ்ஞானம் படிக்கும் மாணவரும் இதற்கு விதிவிலக்கல்ல.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்: கணினிகளின் உதவியால் விஞ்ஞான ஆராய்ச்சி வளர்ந்து வருகிறது. கணினிகளே விஞ்ஞானம் அல்ல. மனித விஞ்ஞான சிந்தனையை கணினிகள் என்றும் நீக்கப் போவதில்லை. விஞ்ஞானத்தில் முடிவுகள் சர்ச்சைகளுக்குப் பின், பொதுவாக விஞ்ஞான வல்லுனர்களாலும் ஒப்புக் கொண்ட பின்பே கோட்பாடாகிறது. இதை negotiated truth என்று நகைச்சுவையோடு சொல்வதுண்டு. அத்துடன் காரணத்தன்மைக்கும் (causation) சம்மந்தத்தண்மைக்கும் (correlation) நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒன்றிருந்தால், மற்றொன்றை பிடித்துவிடலாம் என்பதெல்லாம் விஞ்ஞான பித்தலாட்டமாகிவிடக் கூடிய வாய்ப்புகள் அதிகம். காரணத்தன்மையை சந்தேகத்திற்கு இடமின்றி நிறூபிப்பது என்றும் விஞ்ஞானத்தின் அடிப்படைத் தேவை.

இக்கட்டுரைகளை 2011 முதல் 2013 –ல் ‘சொல்வனம்’ பத்திரிக்கையில் வெளிவந்தன. இவற்றை வெளியிட்ட சொல்வனம் ஆசிரியர் குழுவிற்கு என் நன்றி.

ரவி நடராஜன் மார்ச் 2015

License

Share This Book